|
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
|
|
புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
புறம் தூய்மை நீரான் அமையும் - ஒருவனுக்கு உடம்பு தூய்தாந் தன்மை நீரானே உண்டாம்: அகம் தூய்மை வாய்மையான் காணப்படும். - அதுபோல, மனம் தூய்தாந் தன்மை வாய்மையான் உண்டாம். "(காணப்படுவது உளதாகலின் , 'உண்டாம்' என்று உரைக்கப்பட்டது. உடம்பு தூய்தாதல்: வாலாமை நீங்குதல்: மனம் தூய்தாதல் மெய்யுணர்தல். புறம் தூய்மைக்கு நீரல்லது காரணம் இல்லாதாற் போல, அகம் தூய்மைக்கு வாய்மையல்லது காரணம் இல்லை என்பதாம். இதனானே, துறந்தார்க்கு இரண்டு தூய்மையும் வேண்டும்" என்பதூஉம் பெற்றாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
உடம்பு தூயதாதல் நீரினாலே யமைந்து விடும்: மனத்தின் தூய்மை மெய்சொல்லுதலினாலே யறியப்படும்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
புறம் தூய்மை நீரான் அமையும் - ஒருவனது உடம்புத்தூய்மை நீரால் உண்டாகும்; அகம் தூய்மை வாய்மையான் காணப்படும்- உள்ளத்தூய்மை வாய்மையால் அறியப்படும்.
புறந்தூய்மை அழுக்குப் போதல்; அகத்தூய்மை குற்றம் நீங்குதல். காணப்படுதல் அறியப்படுதல். காணுதல் என்றது அகக் கண்ணாற் காணுதலை. புறத்தழுக்கும் நீரும் போல அகக் குற்றமும் வாய்மையும் காட்சிப் பொருளன்மையின், அறியப்படும் என்றார். வாய்மையால் அகத்தூய்மை உண்டாகும் வகை மேற் கூறப்பட்டது. துறவியர்க்குப் புறந்தூய்மையினும் அகத்தூய்மையே சிறந்ததென்பாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம்
அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும்
வாய்மை வேண்டும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
உடம்பு தண்ணீரால் சுத்தமாகும்; உள்ளம் உண்மையால் சுத்தமாகும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(எல்லா அறங்களுக்கும் அடிப்படை மனச் சுத்தம்.) உடலின் வெளிப்புறத்தைத் தண்ணீரால் சுத்தப்படுத்தலாம். ஆனால் உடலின் உட்புறமாகிய உள்ளத்தை வாய்மை தான் சுத்தப்படுத்தும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஒருவனுக்கு உடம்பு தூய்மையாவது நீராலேயே அமையும். மனம் தூய்மையாக இருப்பதென்பது வாய்மையால் உண்டாகிக் காணப்படும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒருவர்க்கு உடல் தூய்மையை நீராடல் மூலம் பெறலாம்; அகத்தூய்மையை வாய்மையால் பெறலாம்.
|
|
Translation
|
|
Outward purity the water will bestow;
Inward purity from truth alone will flow.
|
|
Explanation
|
|
Purity of body is produced by water and purity of mind by truthfulness.
|
|
Transliteration
|
|
Puraldhooimai Neeraan Amaiyum Akandhooimai
Vaaimaiyaal Kaanap Patum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|