|
புடமிட்டு சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல் தவம் செய்கின்றவரை துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
சுடச்சுடரும் பொன் போல் - தீயின்கண் ஓடும் பொன்னுக்கு அது சுடச்சுடத் தன்னோடு கலந்த குற்றம் நீங்கி ஒளி மிகுமாறு போல, நோற்கிற்பவர்க்குத் துன்பம் சுடச்சுட ஒளி விடும். தவம் செய்ய வல்லார்க்கு அதனான் வரும் துன்பம் வருத்த வருத்தத் தம்மொடு கலந்த பாவம் நீங்கி ஞானம் மிகும். ( 'சுடச்சுடரும் பொன் போல்' என்றார் ஆயினும், கருத்து நோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது. ஒளி போலப் பொருள்களை விளக்கலின். 'ஒளி' என்றார்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நெருப்பின்கண்ணே இட இடத் தன்னோடு கலந்த மாசற்று ஒளிவிடுகின்ற பொன்னைப்போலத் துன்பம் நலிய நலியத் தவஞ்செய்வார்க்குத் தம்மோடு மருவின வினை விட்டு ஒளிவிடும்.
இது வினைவிட் டொளி யுண்டாம் என்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
சுடச் சுடரும் பொன்போல்-உருக்கப்படும் பொன் தீத் தன்னைச் சுடச்சுடத் தன் மாசு மறு நீங்கி ஒளி மிகுவது போல; நோற்கிற்பவர்க்குத் துன்பம் சுடச்சுட ஒளிவிடும் - தவஞ் செய்ய வல்லவர்க்குஅதனால் வருந்துன்பம் தம்மை வருத்த வருத்தத் தம் தீவினைத் தன்மையும் நீங்கித் தெள்ளறிவு மிகும்.
தவம் என்னும் சொல்லின் வேர்ப்பொருள் இக் குறளிலுள்ள உவமம் பொருளிரண்டிலும் விளக்கமாயிற்று. 'கில்' ஆற்ற லுணர்த்தும் இடைநிலை.
|
|
கலைஞர் உரை:
|
|
தம்மைத் தாமே வருத்திக் கொண்டு ஒரு குறிக்கோளுக்காக நோன்பு
நோற்பவர்களை எந்தத் துன்பங்கள் தாக்கினாலும் அவர்கள் சுடச்சுட
ஒளிவிடும் பொன்னைப் போல் புகழ் பெற்றே உயர்வார்கள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நெருப்பு சுடச்சுடப் பொன்னின் ஒளி பெருகுவது போலத் துன்பம் வருத்த வருத்தத் தவம் செய்பவர்க்கு ஞானம் பெருகும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
நெருப்பிலிட்டுக் காய்ச்சக் காய்ச்சக் களிம்பு நீங்கி மாற்றுயர்ந்து ஒளி அதிகப்படுகிற தங்கத்தைப்போல் துன்பங்கள் அடுத்தடுத்து வந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் தவஞ் செய்கிறவனுக்குத் தவ வலிமை அதிகப்பட்டு ஞான ஒளி உண்டாகும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தீயினில் சுடச்சுட பொன்னானது மாசு நீங்கி ஒளி மிகுந்து தோன்றுவது போல, தவம் செய்ய வல்லவர் களுக்குத் துன்பம் நீங்கி ஞானம் பிறக்கும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நெருப்பிற் சுடச்சுடப் பொன் ஒளிருதல் போல, துன்பத்துள்பட்டு உழல உழல தவவாழ்விற்கு மெருகேற்படும்
|
|
Translation
|
|
The hotter glows the fining fire, the gold the brighter shines;
The pain of penitence, like fire, the soul of man refines.
|
|
Explanation
|
|
Just as gold is purified as heated in the fire, will those shine, who have endured the burning of pain (in frequent austerities).
|
|
Transliteration
|
|
Sutachchutarum Ponpol Olivitum Thunpanjjch
Utachchuta Norkir Pavarkku
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|