Thirukural

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்பொருளல்ல தவ்வூன் தினல்.

அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அருள் யாது எனின் கொல்லாமை - அருள் யாது எனின், கொல்லாமை : அல்லது (யாதெனின்) கோறல் - அருள் அல்லது யாது எனின் கோறல்: அவ்வூன் தினல் பொருள் அல்லது - ஆகலான் அக்கோறலான் வந்த ஊனைத் தின்கை பாவம். (உபசாரவழக்கால் 'கொல்லாமை, கோறல்' ஆகிய காரியங்களை 'அருள் அல்லது' எனக் காரணங்கள் ஆக்கியும் 'ஊன் தின்கை' ஆகிய காரணத்தைப் 'பாவம்' எனக் காரிய மாக்கியும் கூறினார். அருளல்லது - கொடுமை. சிறப்புப்பற்றி அறமும் பொருள் எனப்படுதலின், பாவம் பொருள் அல்லது எனப்பட்டது. 'கோறல்' என முன் நின்றமையின் 'அவ்வூன்' என்றார். இனி இதனை இவ்வாறன்றி 'அருளல்லது' என்பதனை ஒன்றாக்கிக், 'கொல்லாமை கோறல்' என்பதற்குக் 'கொல்லாமை என்னும் விரதத்தை அழித்தல்' என்று உரைப்பாரும் உளர்.)
மணக்குடவர் உரை:
அருளல்லது யாதெனின், கொல்லாமையைச் சிதைத்தல்; பொருளல்லது யாதெனின் அவ்வூனைத் தின்றல். இஃது அதனை யுண்டதால் அருள் கெடுதலேயன்றிப் பெறுவதொரு பயனுமில்லை என்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
அருள் யாது எனின் கொல்லாமை-அருள் என்பது என்னது எனின் கொல்லாமை; அல்லது (யாது எனின்) கோறல்-அருளல்லாதது எதுவெனின் கொல்லுதல் ; அவ்வூன் தினல் பொருள் அல்லது-ஆதலால், அக்கொல்லுதலால் வந்த ஊனைத் தின்பது கரிசு (பாவம்). கொல்லாமை கோறல் ஆகிய கருமகங்களை (காரியங்களை) அருள் அல்லது எனக் கரணகங்களாக (காரணகங்களாக)க் கூறியது சார்ச்சி (உபசார) வழக்கு. அறமும் பொருளெனப்படுவதால் அறமல்லாத கரிசைப் பொருளல்லது என்றார். அவ்வூன் என்ற சேய்மைச் சுட்டு முன்னின்ற கோறலைத் தழுவியது. மணக்குடவர் முதலடியை நிரனிறையாகப் பகுக்காது ஆற்றொழுக்காகக் கொண்டு "அருளல்லது யாதெனின் கொல்லாமையைச் சிதைத்தல்", என்று பொருள் கூறுவர்.
கலைஞர் உரை:
கொல்லாமை அருளுடைமையாகும்; கொல்லுதல் அருளற்ற செயலாகும். எனவே ஊன் அருந்துதல் அறம் ஆகாது.
சாலமன் பாப்பையா உரை:
இரக்கம் எது என்றால் கொலை செய்யாமல் இருப்பதே; இரக்கம் இல்லாதது எது என்றால் கொலை செய்வதே; பாவம் எது என்றால் இறைச்சியைத் தின்பதே.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
அருள் என்பது கொலை செய்யாமல் இருப்பது. அருளல்லாதது கொலை செய்வது. அப்படியிருக்க அருள் நெறியை மேற்கொண்ட துறவி கொலை செய்து வருகிற ஊனைத் தின்பது அர்த்தமில்லாத காரியம்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
அருள் யாது என்று கேட்டால் கொல்லாமையேயாகும். அருள் அல்லாதது யாது என்றால் கொலை செய்வதேயாகும். கொன்ற ஊனைத் தின்னுதல் தீமையாகும்.
தமிழ்க்குழவி உரை:
அருள் எனப்படுதல் கொல்லாமை, அருள் அல்லது எனப்படுதல் கொலைத்தொழில், பொருளல்லாத தன்மையா தெனில் கொன்றதன் ஊனைத் தின்று வாழ்தல்.
Translation
'What's grace, or lack of grace'? 'To kill' is this, that 'not to kill'; To eat dead flesh can never worthy end fulfil.
Explanation
If it be asked what is kindness and what its opposite, the answer would be preservation and destruction of life; and therefore it is not right to feed on the flesh (obtained by taking away life).
Transliteration
Arulalladhu Yaadhenin Kollaamai Koral Porulalladhu Avvoon Thinal

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 254