Thirukural

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்தஇன்னா உலகம் புகல்.

அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
இருள் சேர்ந்த இன்னா உலகம் புகல் - இருள் செறிந்த துன்ப உலகத்துள் சென்று புகுதல், அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை - அருள் செறிந்த நெஞ்சினை உடையார்க்கு இல்லை. ('இருள் செறிந்த துன்ப உலகம்' என்றது, திணிந்த இருளை உடைத்தாய்த் தன் கண்ணே புக்கார்க்குத் துன்பம் செய்வதோர் நரகத்தை, அது கீழுலகத்துள் ஓர் இடம் ஆகலின், 'உலகம்' எனப்பட்டது.)
மணக்குடவர் உரை:
அருளைப் பொருந்தின நெஞ்சினையுடைவர்க்கு இருளைப் பொருந்தின நரகலோகம் புகுதலில்லை. இது நரகம் புகாரென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
இருள் சேர்ந்த இன்னா உலகம் புகல் - இருள் திணிந்த துன்பவுலகமாகிய நரகத்துட் புகுதல்; அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை - அருள் நிறைந்த நெஞ்சையுடைய துறவியருக் கில்லை. தீயுழியும் அளறும் போல இருளுலகமும் நரக வகையாம்.
கலைஞர் உரை:
அருள் நிறைந்த மனம் படைத்தவர் அறியாமை எனும் இருள் சூழ்ந்த துன்ப உலகில் உழலமாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
அருள் நிறைந்த நெஞ்சத்தவர்க்கு, இருட்டான, துன்ப உலகமாகிய நரகம் புகும் நெருக்கடி இல்லை.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அருள் நெறியை மேற்கொண்டவர்கள் உலகத்திலுள்ள மருள் நெறிகளோடு சேரமாட்டார்கள்.) சீவகாருணியம் நிறைந்த மனமுடையவர்கள் அறியாமை நிறைந்த உலக விவகாரத் துன்பங்களில் ஈடுபடமாட்டார்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
இருள் நிறைந்த துன்ப உலகத்தில் சென்று புகுதல் என்பது அருள் நிறைந்த நெஞ்சினையுடையவர்களுக்கு இல்லை.
தமிழ்க்குழவி உரை:
அருளுடைமையை உடைமையாகக் கொண்ட கருணை மனத்தினர்க்கு இவ்வுலகில் துன்பம் நல்கும் இருள்சார்ந்த நிலை இல்லை.
Translation
They in whose breast a 'gracious kindliness' resides, See not the gruesome world, where darkness drear abides.
Explanation
They will never enter the world of darkness and wretchedness whose minds are the abode of kindness.
Transliteration
Arulserndha Nenjinaark Killai Irulserndha Innaa Ulakam Pukal

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 243