|
பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
செல்வத்துள் செல்வம் அருட்செல்வம் - செல்வங்கள் பலவற்றுள்ளும் ஆராய்ந்தெடுக்கப்பட்ட செல்வமாவது அருளான்வரும் செல்வம், பொருட் செல்வம் பூரியார் கண்ணும் உள - அஃது ஒழிந்த பொருளான் வரும்செல்வங்கள் இழிந்தார்கண்ணும் உளவாம் ஆகலான். ( அருளான் வரும் செல்வமாவது, உயிர்களை ஓம்பி அவ்வறத்தான் மேம்படுதல். உயர்ந்தார்கண்ணே அல்லது இல்லாத அருட்செல்வமே சிறப்புடைய செல்வம், ஏனை நீசர்கண்ணும் உளவாம்பொருட் செல்வங்கள் சிறப்பு இல என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
செல்வத்துள் வைத்துச் செல்வமாவது அருளுடைமையாகிய செல்வமாம்; பொருட்செல்வமானது கீழாயினோர்மாட்டும் உளவாதலால்.
இஃது அருள்நிலை கூறிற்று.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
செல்வத்துள் செல்வம் அருள் செல்வம் - செல்வங்களெல்லாவற்றுள்ளும் சிறந்தது அருளாகிய செல்வமே; பொருள் செல்வம் பூரியார் கண்ணும் உள - மற்றப் பொருளாகிய செல்வங்கள் கீழ் மக்களிடத்திலும் உள்ளன.
செல்வம் போன்ற பண்பைச்செல்வ மென்றார். உம்மை இழிவு சிறப்பு.
|
|
கலைஞர் உரை:
|
|
கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில்
செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட்
செல்வத்துக்கு ஈடாகாது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
செல்வங்கள் பலவற்றுள்ளும் சிறந்தது அருள் என்னும் செல்வமே. பொருட்செல்வம் இழிந்த மனிதரிடமும் உண்டு.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
உடைமைகளிலெல்லாம் சிறந்த உடைமை அருளுடைமை. வெறும் பண உடைமை தீயவர்களிடத்திலும் உண்டு.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
செல்வங்களுக்குள் சிறந்த செல்வமாவது அருளால் வரும் செல்வமேயாகும். அதுவல்லாமல், பிற செல்வங்கள் பொருளால் வருபவை. இழந்தவர்களிடத்திலும் இருப்பதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
அனைத்துச் செல்வங்களிலும் சிறந்த செல்வமாவது அருட்செல்வமே. பொருட்செல்வமானது இழிந்த பண்பினரிடத்தும் உண்டு.
|
|
Translation
|
|
Wealth 'mid wealth is wealth 'kindliness';
Wealth of goods the vilest too possess.
|
|
Explanation
|
|
The wealth of kindness is wealth of wealth, in as much as the wealth of property is possessed by the basest of men.
|
|
Transliteration
|
|
Arutchelvam Selvaththul Selvam Porutchelvam
Pooriyaar Kannum Ula
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|