|
அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் - திண்மை என்னும் தோட்டியால் பொறிகள் ஆகிய யானை ஐந்தினையும் தத்தம் புலன்கள்மேல் செல்லாமல் காப்பான்; வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து - எல்லா நிலத்திலும் மிக்கது என்று சொல்லப்படும் வீட்டு நிலத்திற்கு ஓர் வித்து ஆம். (இஃது ஏகதேச உருவகம். திண்மை ஈண்டு அறிவின் மேற்று. அந்நிலத்திற்சென்று முளைத்தலின், 'வித்து' என்றார். ஈண்டுப் பிறந்து இறந்து வரும் மகனல்லன் என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
அறிவாகிய தோட்டியானே பொறியாகிய யானையைந் தினையும் புலன்களிற் செல்லாமல் மீட்பவன் மேலாகிய விடத்தே யாதற்கு இவ்விடத்தேயிருப்பதொரு வித்து.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
உரன் என்னும் தோட்டியான் - அறிவு என்னும் துறட்டியினால், ஓரைந்தும் காப்பான் - பொறிகளாகிய யானைகள் ஐந்தையும் தன்தன் புலன்மேற் செல்லாது அடக்குபவன்; வரன் என்னும் வைப்பிற்கு - எல்லா நிலங்களுள்ளும் மேலான வீட்டு நிலத்திற்போய் முளைத்தற்குரிய; ஓர் வித்து - ஒரு விளைந்த மணி விதை போல்வான்.
உரனைத் துறட்டியாக உருவகித்துப் பொறிகளை யானைகளாக உருவகியாதது ஒருமருங்குருவகம். துறடு - துறட்டி - தோட்டி.
புரம் = மேல், மேன்மாடம். புரம் - பரம் = மேல், மேலிடம், மேலுலகம். பரம் - வரம் = மேன்மை. வரம் - வரன் (கடைப்போலி) = மேலுலகம், வீட்டுலகம்.
இனி, வைப்பு என்பதற்குச் சேர்த்து வைக்கும் இடம் என்று பொருள்கொண்டு, வீட்டுலமாகிய களஞ்சியத்திற் சேர்த்துவைக்கப் பெறும் விளைந்த மணிபோல்வான் என்று உரைக்கினும் பொருந்தும்.
|
|
கலைஞர் உரை:
|
|
உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல், அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
வைராக்கியம் என்ற அங்குசத்தால் ஐந்து இந்திரியங்களான மதயானைகளை அடக்கியாண்டு உலகத்துக்கு நன்மை உண்டாக்கக் கூடிய தெய்விக சத்திக்கு இருப்பிடமானவர் அம்மகான்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
அறிவு என்னும் அங்குசத்தினால் பொறிகளாகிய ஐந்து யானைகளையும் ஆசைகளில் சொல்லாமல் காப்பவன் எல்லாவற்றிலும் மேலான வீடு என்னும் பேரின்ப நிலத்திற்கு ஒரு வித்து ஆவான்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
மனஉறுதி' என்னும் தோட்டியால் யானைகளொத்த ஐந்து புலன்களையும் நெறிப்படுத்தி வாழ்பவன், வையக நன்மைகளுக்கோர் நல்வித்து.
|
|
Translation
|
|
He, who with firmness, curb the five restrains, Is seed for soil of yonder happy plains.
|
|
Explanation
|
|
He who guides his five senses by the hook of wisdom will be a seed in the world of heaven.
|
|
Transliteration
|
|
Uranennum Thottiyaan Oraindhum Kaappaan
Varanennum Vaippirkor Viththu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|