Thirukural

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்போற்றாது புத்தேள் உலகு.

நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ் செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
நிலவரை நீள் புகழ் ஆற்றின் - ஒருவன்நில எல்லைக் கண்ணே பொன்றாது நிற்கும் புகழைச் செய்யுமாயின் புத்தேள் உலகு புலவரைப் போற்றாது - புத்தேள் உலகம் அவனையல்லது தன்னை எய்தி நின்ற ஞானிகளைப் பேணாது. (புகழ் உடம்பான் இவ்வுலகும், புத்தேள் உடம்பான் அவ்வுலகும் ஒருங்கே எய்தாமையின், புலவரைப் போற்றாது என்றார். அவன் இரண்டு உலகும் ஒருங்கு எய்துதல், 'புலவர் பாடும் புகழுடையோர்விசும்பின் வலவன் ஏவாவான ஊர்தி எய்துப என்பதம் செய்வினை முடித்து' (புறநா.27), எனப் பிறராலும் சொல்லப்பட்டது.)
மணக்குடவர் உரை:
ஒருவன் நிலத்தெல்லையின் கண்ணே நெடிய புகழைச் செய்வனாயின் தேவருலகம் புலவரைப் போற்றாது இவனைப் போற்றும். புலவரென்றார் தேவரை, அவர் புலனுடையாராதலான். இது புகழ் செய்தாரைத் தேவருலகம் போற்றுமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
நிலவரை நீள்புகழ் ஆற்றின் - ஒருவன் ஈகையால் நிலவுலகத்தின்கண் நிலையான புகழைச் செய்வானாயின், புத்தேள் உலகு புலவரைப் போற்றாது-தேவருலகம் அவனையன்றி அறிவால் மட்டுஞ் சிறந்தவரை விரும்பாது. இக் கொள்கையை. "புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவ னேவா வான வூர்தி யெய்துப வென்பதஞ் செய்வினை முடித்தெனக் கேட்ப லெந்தை சேட்சென்னி நலங்கிள்ளி வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி யருள வல்லை யாகுமதி யருளிலர் கொடாமை வல்ல ராகுக கெடாத துப்பினின் பகையெதிர்ந் தோரே". என்னும் 27-ஆம் புறப்பாட்டுப் பகுதியாலும் அறிக. இதனால் வேள்வி செய்தவர் விண்ணுல கடைவர் என்னும் ஆரியக் கொள்கை மறுக்கப் பட்டமை காண்க.
கலைஞர் உரை:
இனிவரும் புதிய உலகம்கூட இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ் ஈட்டிய பெருமக்களை விடுத்து, அறிவாற்றல் உடையவரை மட்டும் போற்றிக் கொண்டிராது.
சாலமன் பாப்பையா உரை:
தன்னில் வாழும்அறிஞரைப் போற்றாமல், இந்த நில உலகில்நெடும்புகழ் பெற்று வாழந்தவரையே தேவர் உலகம் பேணும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
உயிரோடிருக்கிற வரையில் ஏழைகளுக்குக் கொடுத்துப் புகழ் வரக்கூடிய காரியங்களைச் செய்துவந்தால் நினைவில் இருந்து வருகிற தேவலோகத்தைப்பற்றி ஆசைப்பட வேண்டியதில்லை.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
ஒருவன் இப்பூமியின் எல்லைக்குள் அழியாத புகழினை உண்டாக்கிக் கொள்ளுவானேயானால், உலகம் அவனையல்லாமல் வருகின்ற புலவர்களைப் பாராட்டாது.
தமிழ்க்குழவி உரை:
உலகம் முழுவதும் பரந்த புகழைத் தம் செயலால் ஒருவர் பெறுவாராயின் புலவரைக் கூடப் போற்றாத வானுலகம் அவரைப் போற்றிப் பாராட்டும்.
Translation
If men do virtuous deeds by world-wide ample glory crowned, The heavens will cease to laud the sage for other gifts renowned.
Explanation
If one has acquired extensive fame within the limits of this earth, the world of the Gods will no longer praise those sages who have attained that world.
Transliteration
Nilavarai Neelpukazh Aatrin Pulavaraip Potraadhu Puththel Ulaku

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 234