|
வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
அற்றார் அழிபசி தீர்த்தல் - வறியாரது மிக்க பசியை அறன் நோக்கித் தீர்க்க, பொருள் பெற்றான் ஒருவன் வைப்புழி அஃது - பொருள் பெற்றான் ஒருவன் அதனைத் தனக்கு உதவ வைக்கும் இடம் அவ்வறம் ஆகலான். (எல்லா நன்மைகளும் அழிய வருதலின், 'அழி பசி' என்றார். 'அறம் நோக்கி' என்பது எஞ்சி நின்றது. 'அற்றார் அழிபசி தீர்த்த' பொருள் பின் தனக்கே வந்து உதவும் என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பொருளற்றாராது குணங்களையழிக்கும் பசியைப் போக்குக. அது செய்ய ஒருவன் தான் தேடின பொருள் வைத்தற்கு இடம் பெற்றானாம்.
இது பகுத்துண்ணப் பொருளழியாது என்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
அற்றார் அழிபசி தீர்த்தல்-வறியவரின் கடும்பசியைத் தீர்க்க; அஃது ஒருவன் பொருள் வைப்புழி பெற்றான்-அவ்வறச் செயலால் ஒருவன் தான் தேடிய செல்வத்தை மறுமையில் தனக்குப் பயன்படுமாறு சேமித்து வைக்கும் ஏம வைப்பகத்தைப் (Savings Bank) பெற்றானாவன்.
கொல்வது போல வருத்துவதனாலும், குடிப்பிறப்பு கல்வி மானம் அறிவுடைமை முதலிய பேறுகளையும் பண்புகளையும் அழிப்பதனாலும், கடும்பசி அழிபசி யெனப்பட்டது. வறியவரின் பசியைத் தீர்த்தற்குச் செலவிட்ட பொருள் பின்பு தனக்கே வந்துதவுதலால் அருள் நோக்கிச் செய்யாவிடினும் தனக்குப் பயன்படும் அறம் நோக்கியேனும் அதைச்செய்க என்றவாறு.
'தீர்த்தல்' தல்லீற்று வியங்கோள். பெற்றான் என்பது தேற்றம் பற்றிய காலவழுவமைதி. அஃதொருவன் என்பது அதுவொருவன் என்றும் இருக்கலாம். அடுத்த அதிகார முதற் குறளில் 'வாழ்தலதுவல்லது' என வருதல் காண்க.
|
|
கலைஞர் உரை:
|
|
பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது.
அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச்
சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
ஏழைகளின் கடும்பசியைத் தீர்த்து வைக்கிற அந்தக் காரியம் ஒருவன் பின்னால் தனக்கு வேண்டுமே என்று செல்வத்தை ஓர் இடத்தில் சேமித்து வைப்பதைப் போன்றது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
வறியவர்களது கொடிய பசியை ஆறாம் நோக்கிப் போக்குதல் வேண்டும். அப்படிச் செய்வதாவது, ஒருவன் தான் பெற்றிருக்கும் பொருளினைத் தனக்குப் பயன்படும்படியாக வைக்கும் இடம் என்று கருதப்படும். அந்த அறமே இடமாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பொருளேதும் இல்லாதவர்தம் பசிப்பிணியைத் தீர்த்தலாகிய அறமே பொருளுடையார் தம் செல்வத்தைச் சேர்த்து வைத்தற்கு உரிய நிறைகலன் ஆகும்.
|
|
Translation
|
|
Let man relieve the wasting hunger men endure;
For treasure gained thus finds he treasure-house secure.
|
|
Explanation
|
|
The removal of the killing hunger of the poor is the place for one to lay up his wealth.
|
|
Transliteration
|
|
Atraar Azhipasi Theerththal Aqdhoruvan
Petraan Porulvaip Puzhi
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|