Thirukural

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்துஅறனல்ல செய்யாமை நன்று.

தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
திறன் அல்ல தன் பிறர் செய்யினும் - செய்யத்தகாத கொடியவற்றைத் தன்கண் பிறர் செய்தாராயினும்; நோநொந்து அறன் அல்ல செய்யாமை நன்று - அவர்க்கு அதனால் வரும்துன்பத்திற்கு நொந்து, தான் அறனல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல் ஒருவனுக்கு நன்று. [உம்மை: சிறப்பு உம்மை. துன்பத்திற்கு நோதலாவது "உம்மை - எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல்" (நாலடி. 58) என்று பரிதல்.]
மணக்குடவர் உரை:
தகுதியல்லாதவற்றைத் தனக்குப் பிறர்செய்தாராயினும் அவற்றைத் தானுஞ் செய்தால் அவர்க்கு உளதாம் நோவுக்கு நொந்து அறமல்லாதவற்றைச் செய்யாமை நன்று.
தேவநேயப் பாவாணர் உரை:
திறன் அல்ல தன் பிறர் செய்யினும் -செய்யத்தகாத கொடியவற்றைத் தனக்குப் பிறர் செய்தாராயினும்; நோநொந்து அறன் அல்ல செய்யாமை நன்று -- அதனால் அவர்க்கு வரும் துன்பத்திற்காக உளம் நொந்து அறனல்லாதவற்றைத் தான் அவர்க்கு செய்யாதிருத்தல் ஒருவனுக்கு நல்லதாம். உம்மை உயர்வு சிறப்பு. துன்பத்திற்கு நோதலைத் "தம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற் றெம்மை யிகழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று பரிவதூஉம் சான்றோர் கடன்" (58) என்னும் நாலடியார்ச் செய்யுளால் அறிந்து கொள்க.
கலைஞர் உரை:
பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி; பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும்.
சாலமன் பாப்பையா உரை:
கொடியவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், பதிலுக்குத் தானும் செய்தால் அவர் வருந்துவாரே என வருந்தி, அறம் அல்லாதவற்றைச் செய்யாது இருப்பது நல்லது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
மன்னிக்க முடியாத குற்றத்தைத் தனக்குப் பிறன் செய்து உடனே தண்டித்துவிட்டாலும் குற்றமில்லை. ஆனால் உடனே திருப்பித் தண்டிக்க தைரியமில்லாமல் சும்மா இருந்து விட்டு அதை மனத்தில் வைத்து நொந்து கொண்டே இருந்து அவன் ஏமாந்த சமயத்தில் அதர்மமான முறையில் பழி வாங்காமல் இருப்பது நல்லது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
செய்யத் தகாத செயலினைத் தன்னிடத்தில் மற்றவன் செய்தாலும் அத்துன்பத்திற்காக வருத்தப்பட்டு அறமல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல் ஒருவனுக்கு நல்லது.
தமிழ்க்குழவி உரை:
தகுதியில்லாத தீங்குகளைப் பிறர்செய்யினும் அதற்காக மிக வருந்தி அவரைத் தண்டிக்கும் பொருட்டுஅறனல்லாத செயல்களைச் செய்யாமை நன்று.
Translation
Though others work thee ill, thus shalt thou blessing reap; Grieve for their sin, thyself from vicious action keep!.
Explanation
Though others inflict injuries on you, yet compassionating the evil (that will come upon them) it will be well not to do them anything contrary to virtue.
Transliteration
Thiranalla Tharpirar Seyyinum Nonondhu Aranalla Seyyaamai Nandru

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 157