|
தீய சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
தீச்சொல் பொருள் பயன் ஒன்றானும் உண்டாயின்- தீயவாகிய சொற்களின் பொருள்களால் பிறர்க்கு வரும் துன்பம் ஒன்றாயினும் ஒருவன் பக்கல் உண்டாவதாயின்; நன்று ஆகாது ஆகிவிடும் - அவனுக்குப் பிற அறங்களான் உண்டான நன்மை தீதாய்விடும். (தீயசொல்லாவன - தீங்கு பயக்கும் பொய், குறளை, கடுஞ்சொல் என்பன. ஒருவன் நல்லவாகச் சொல்லும் சொற்களின் கண்ணே ஒன்றாயினும் 'தீச்சொற்படும் பொருளினது பயன் பிறர்க்கு உண்டாவதாயின்' என்று உரைப்பாரும் உளர்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
ஒரு சொல்லேயாயினும் கேட்டார்க்கு இனிதாயிருந்து தீயசொல்லின் பொருளைப் பயக்குமாயின், நன்மையாகாதாகியே விடும்.
இது சால மொழிகூறினாலுந் தீதாமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
தீச்சொற் பொருட்பயன் ஒன்றானும் உண்டாயின் - ஒருவன் கூறும் தீய சொற்களின் பொருளால் விளையும் துன்பம் ஒன்றேனும் பிறர்க்கு உண்டாயின் ; நன்று ஆகாது ஆகிவிடும் - அவன் ஏற்கெனவே செய்துள்ள பிறவறங்கள் பயன்படாமற்போம் .
சொற்குற்றம் பொய் , குறளை , கடுஞ்சொல் , பயனில் சொல் என நான்கு என்பர்.
" ஒரு சொல்லேயாயினும் கேட்டார்க்கு இனிதாயிருந்து தீய சொல்லின் பொருளைப் பயக்குமாயின் , நன்மை யாகாதாகியேவிடும் " என்னும் மணக்குடவ ருரை பொருந்துவதன்று .
|
|
கலைஞர் உரை:
|
|
ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல்
தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில்
உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தீய சொற்களின் பொருளால் பிறர்க்கு வரும் துன்பம் சிறிதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையம் தீமையாகப் போய்விடும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஏனென்றால்) பேசுவதில் ஒரு சொல்லானாலும் கெட்ட அர்த்தத்தைக் கொடுக்கக்கூடியதாக இருந்துவிட்டால் காரியமும் கெட்டு அடக்கமுடைமையும் கெட்டுப்போகும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தீய சொற்களினுடைய தன்மைகளில் பிறருக்கு வருகின்ற துன்பம் ஒன்றேனும் ஒருவனிடத்தில் உண்டாகிவிட்டால் அவனுக்கு பிற நன்மைகளினால் உண்டான பயனும் தீயதாய் ஆகிவிடும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நாவினின்று உதிரும் சொற்களில் ஏதேனும் ஒன்றினால் ஒருதீமை விளையும் என்றாலும் கூட அதனால் பிற நன்மைகள் எல்லாம் பாழ்பட்டுப் போக வாய்ப்புண்டு.
|
|
Translation
|
|
Though some small gain of good it seem to bring,
The evil word is parent still of evil thing.
|
|
Explanation
|
|
If a man's speech be productive of a single evil, all the good by him will be turned into evil.
|
|
Transliteration
|
|
Ondraanun Theechchol Porutpayan Untaayin
Nandraakaa Thaaki Vitum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|