|
வெற்றியை விரும்பி ஊக்கமே துணையாகக் கொண்டு வெளிநாட்டுக்குச் சென்ற காதலர், திரும்பி வருதலைக் காண விரும்பியே இன்னும் யான் உயிரோடு இருக்கின்றேன்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இதுவும் அது.) உரன் நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் - இன்பம் நுகர்தலை நச்சாது வேறலை நச்சி நாம் துணையாதலை இகழ்ந்து தம்ஊக்கம் துணையாகப் போனார்; வரல் நசைஇ இன்னும் உளேன் - அவற்றை இகழ்ந்து ஈண்டு வருதலை நச்சுதலான், யான் இவ்வெல்லையினும் உளேனாயினேன். ('உரன்' என்பது ஆகுபெயர். 'அந்நசையான் உயிர் வாழா நின்றேன்,அஃதில்லையாயின் இறந்துபடுவல்', என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
இன்பத்தை நச்சாது வலிமையையே நச்சிப் பேசுகின்ற மனமே துணையாகச் சென்றவர் வருவாரென்கின்ற ஆசைப்பாட்டினால் இன்னும் உளேனானேன். இஃது அவர் வாராரென்று கூறியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
(இதுவுமது) உரன் நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்- இன்ப நுகர்ச்சியை விரும்பாது வலிமையாற் பெறும் போர் வெற்றியை விரும்பி, நம்மைத் துணையாகக் கொள்வதை யிகழ்ந்து ஊக்கத்தைத் துணையாகக் கொண்டு போனவர்; வரல் நசைஇ இன்னும் உளேன்- திரும்பி வருதலை விரும்புதலால் இன்றும் உயிர் வாழ்ந்திருக்கின்றேன். அவ்விருப்பம் இல்லையாயின் இதற்குள் இறந்து பட்டிருப்பேன் என்பதாம். 'உரன்' ஆகுபொருளி. 'நசைஇ' சொல்லிசை யளபெடை.
|
|
கலைஞர் உரை:
|
|
ஊக்கத்தையே உறுதுணையாகக் கொண்டு வெற்றியை விரும்பிச் சென்றுள்ள காதலன், திரும்பி வருவான் என்பதற்காகவே நான் உயிரோடு இருக்கிறேன்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
என்னுடன் இன்பம் நுகர்வதை விரும்பாமல், நான் துணையாவதையும் வெறுத்துத் தன் ஊக்கத்தையே துணையாக எண்ணி, வெற்றி பெறுவதையே விரும்பி என்னைப் பிரிந்தவர், அவற்றை இகழ்ந்து என்னிடம் திரும்ப வருவதை நான் விரும்புவதால் இவ்வளவு காலமும் இருக்கிறேன்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
வாழ்க்கைக்கு உரம் தரக்கூடிய பொருள் தேடும் ஆசையுடன் போயிருக்கிற என் காதலர் வருவார் என்ற ஆசை கொண்டு, அந்த ஆசைக்கு என் மனம் துணையாக அவரை அது மறக்காமல் இருப்பதனால்தான் நான் உயிரோடிருக்கிறேன்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
இன்பம் நுகர்தலை விரும்பாமல் வேறு ஒன்றனை விரும்பித் தமது மனவெழுச்சியாகிய ஊக்கமே துணையாகச் சென்றவர் அவற்றை இகழ்ந்து இங்கு வருதலை விரும்புவதால் யாம் இன்னும் உயிரோடிருக்கிறோம்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
வெற்றியை விரும்பி உள்ள உறுதியுடன் போருக்குச் சென்ற எம் காதலர் விரைந்து வந்துவிடுவார் என்று எண்ணியே இன்னும் உயிரோடு இருக்கிறேன்.
|
|
Translation
|
|
On victory intent, His mind sole company he went;
And I yet life sustain! And long to see his face again!.
|
|
Explanation
|
|
still live by longing for the arrival of him who has gone out of love for victory and with valour as his guide.
|
|
Transliteration
|
|
Urannasaii Ullam Thunaiyaakach Chendraar
Varalnasaii Innum Ulen
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|