|
வெறுத்து நீங்கிய காதலரின் பின் செல்ல விரும்பிய நிலையில் இருப்பதால் என்னை அடைந்த இந்த காமநோய் எத்தன்மையானது? அந்தோ!.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இதுவும் அது.) செற்றவர் பின் சேறல் வேண்டி - என்னை அகன்று சென்றார் பின்னே யான் சேறலை வேண்டுதலான்; என்னை உற்ற துயர் எற்று அளித்து - என்னை உற்ற துயர் எத்தன்மையது? சால நன்று. (செற்றவர் என்றது ஈண்டும், அப்பொருட்டு. 'வேண்ட' என்பது, 'வேண்டி' எனத் திரிந்து நின்றது. 'அளித்து' என்பது இகழ்ச்சிக் குறிப்பு. 'இக்காமநோய் யான் சொல்லவும் கேட்கவும் ஆவதொன்றன்று; சாலக்கொடிது' என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
செறுத்தார்பின்னே யான் சேறலை வேண்டுதலால் என்னை யடைந்த துயர் எத்தன்மைத்து; நன்றாக இருக்கின்றது. இது தனித்திருந்து துயருறுதல் காமத்திற்கு இயற்கையென்று கூறிய தலைமகளை நோக்கி இது நின்போல்வார்க்குத் தகாதென்ற தோழிக்கு அவள் சொல்லியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
(இதுவுமது) (இ-ரை.) செற்றவர் பின்சேறல் வேண்டி-என்னைத் துன்புறத்திப் பிரிந்துசென்றவர் பின்னே யான் செல்லுதலை வேண்டுதலான் ; என்னை உற்ற துயர் எற்று- என்னை யடைந்துள்ள காமநோய் எத்தகையது !; அளித்து-ஐயோ ! இரங்கத்தக்கது !. இக்காம நோய் என்னை அளவிறந்து இழிவுபடுத்துவதால் மிகக். கொடிது என்பதாம் . ' செற்றவர் ' என்றது மேற்குறளிற் 'செற்றார் ' என்றது போன்றதே . ' அளித்து ' எதிர்மறைக் குறிப்பு . ' அரோ ' அசைநிலை.
|
|
கலைஞர் உரை:
|
|
வெறுத்துப் பிரிந்ததையும் பொறுத்துக் கொண்டு அவர் பின்னே செல்லும் நிலையை என் நெஞ்சுக்கு ஏற்படுத்திய காதல் நோயின் தன்மைதான் என்னே.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
என்னைப் பிரிந்து சென்றவர் பின்னே நான் போய்ச் சேர வேண்டும் என்று என்னைப் பிடித்த இந்தக் காதல் நோய் தூண்டுவதால் இது மிகமிகக் கொடியது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
துன்பம் செய்தவரிடத்திலேயே போய் அடைக்கலம் புகச்சொல்லி ஆசை மூட்டுகிறதே, அம்மா! எனக்கு வந்துவிட்ட இந்தக் கவலை எப்படிப்பட்ட விசித்திரமான கவலையாக இருக்கிறது!
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
என்னைவிட்டுப் பிரிந்தவர் பின்னே யான் செல்லுவதை விரும்புவதால், எனக்கு உற்ற துயர் எத்தன்மையானது?. மிகவும் நல்லதேயாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
வெறுத்தவர் பின்னே விரும்பிச் செல்க என என்னை வருத்தும் இக்காதல் துன்பம் பெரிதும் இரங்கத்தக்கதாய் இருக்கிறதே.
|
|
Translation
|
|
My grief how full of grace, I pray you see!
It seeks to follow him that hateth me.
|
|
Explanation
|
|
The sorrow I have endured by desiring to go after my absent lover, in what way is it excellent?.
|
|
Transliteration
|
|
Setravar Pinseral Venti Aliththaro
Etrennai Utra Thuyar
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|