|
வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் (அவற்றைக் காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(தான் ஆற்றுதற் பொருட்டு இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) தொடியோடு தோள்நெகிழ - யான் ஆற்றவும், என்வயத்தவன்றித் தொடிகள் கழலுமாறு தோள்கள் மெலிய; அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து நோவல் - அவற்றைக் கண்டு, நீ அவரைக் கொடியர் எனக் கூறுதலைப் பொறாது யான் என்னுள்ளே நோவா நின்றேன். (ஒடு - மேல் வந்த பொருண்மைத்து. 'யான் ஆற்றேனாகின்றது அவர் வாராததற்கன்று; நீ கூறுகின்றதற்கு' என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
வளையோடே தோள்கள் பண்டுபோல் இறுகாது நெகிழவும், நினக்குச் சொல்லாது யானே நோவேன்: நீ அவரைக் கொடியரென்று சொல்லுகின்றதற்கு நொந்து. இஃது ஆற்றாளெனக் கவன்றதோழிக்கு ஆற்றவலென்பதுபடத் தலைமகள் சொல்லியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
[தானாற்றுதற்பொருட்டுத் தலைமகனை இயற்பழித்த தோழிக்குச் சொல்லியது.] தொடியொடு தோள்நெகிழ- யான் ஆற்றியிருக்கவும் என்வயப்படாது கடகங்கள் கழலுமாறு தோள்கள் மெலிய; அவரைக் கொடியர் எனக் கூறல் நொந்து நோவல்- நீ அவற்றைக் கண்டவளவில் காதலரைக் கொடியர் எனக் கூறுதலைப் பொறாது உள்ளே நோகின்றேன். யான் ஆற்றேனாகின்றது காதலர் வராததிற்கன்று; நீ அவரைக் குறைகூறுகின்றதற்கே யென்பதாம். 'ஒடு' மேற்கூறியதே.
|
|
கலைஞர் உரை:
|
|
என் தோள்கள் மெலிவதையும், வளையல்கள் கழன்று விழுவதையும் காண்போர் என்னுடையவர் இரக்கமற்றவர் என இயம்புவது கேட்டு இதயம் நொந்து போகிறேன்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
வளையல்கள் கழன்று தோள்கள் மெலிய, அவரைக் கொடுமையானவர் என்று அவை நொந்து பேசுவதைக் கேட்டு நான் வருந்துகிறேன்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
என் காதலரை நான் கொடியவர் என்று சொல்லி விட்டதற்கு வருத்தப்படுகிற என் மனம், என்னுடைய கை வளையல்கள் கழன்று விழும்படி என் தேகம் இளைத்துப் போனதற்கு வருத்தப்படவில்லையே!
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
வளையல்கள் கழலுமாறுதோள்கள் மெலிந்ததால் அவரைப் பிறர் கொடியர் எனக் கூறுதலைப் பொறுக்க முடியாமல் யான் என்னுள்ளே நொந்து நிற்கின்றேன்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
வளையல்கள் கழன்று விழவும் தோள்கள் மெலிந்து தாழவும் கண்டு, எம் காதலர் கொடியவர் எனப் பிறர் கூறுவரோ என்று வருந்துகிறேன்.
|
|
Translation
|
|
grieve, 'tis pain to me to hear him cruel chid,
Because the armlet from my wasted arm has slid.
|
|
Explanation
|
|
I am greatly pained to hear you call him a cruel man, just because your shoulders are reduced and your bracelets loosened.
|
|
Transliteration
|
|
Thotiyotu Tholnekizha Noval Avaraik
Kotiyar Enakkooral Nondhu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|