|
நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பர்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இதுவும் அது.) நனவென ஒன்று இல்லையாயின் - நனவு என்று சொல்லப்படுகின்ற ஒரு பாவி இல்லையாயின்; கனவினான் காதலர் நீங்கலர் - கனவின்கண் வந்து கூடிய காதலர் என்னைப் பிரியார். ('ஒன்று' என்பது, அதன் கொடுமை விளக்கி நின்றது. அஃது இடையே புகுந்து கனவைப் போக்கி அவரைப் பிரிவித்தது என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. கனவிற் பெற்று ஆற்றுகின்றமை கூறியவாறு.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நனவென்று சொல்லப்படுகின்ற ஒருபாவி இல்லையாயின் கனவின்கண் வந்து கூடிய காதலர் என்னைப் பிரியார்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நனவு என ஒன்று இல்லையாயின் - நனவென்று சொல்லப்படுகின்ற ஒரு காலவேறுபாடு இல்லையாயின்; கனவினாற் காதலர் நீங்கலர் - கனவின்கண் வந்து கூடுங் காதலர் என்னைவிட்டு ஒருபோதும் பிரியார். இடைவிடாது கனவு காணலாமாதலின் 'நீங்கார்' என்றாள். 'ஒன்று' என்பது வேறுபாடு விளக்கி நின்றது. 'மன்' அந்நிலைமையில்லை யென்பதுபட நிற்றலின் ஒழியிசை.
|
|
கலைஞர் உரை:
|
|
நனவு மட்டும் திடிரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில் சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
கண்ணால் காண்பது என்றொரு கொடிய பாவி இல்லை என்றால் கனவிலே வந்து கூடிய என்னவர் என்னைப் பிரிய மாட்டார்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
இந்த விழிப்பு என்ற ஒன்று இல்லாதிருந்தால் கனவினால் என்னிடம் கொண்டு வரப்பட்ட என் காதலர் என்னைவிட்டுப் போயிருக்கவே மாட்டார்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நனவு என்று சொல்லப்படுகின்ற ஒரு பாவி இல்லையாயின் கனவிலே வந்து கூடிய காதலர் என்னைப் பிரியார்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நனவென ஒன்று இல்லாதிருப்பின் கனவில் வந்த எம் காதலர் என்னை விட்டு நீங்காமலேயே இருந்திருப்பாரோ?
|
|
Translation
|
|
And if there were no waking hour, my love
In dreams would never from my side remove.
|
|
Explanation
|
|
Were there no such thing as wakefulness, my beloved (who visited me) in my dream would not depart from me.
|
|
Transliteration
|
|
Nanavena Ondrillai Aayin Kanavinaal
Kaadhalar Neengalar Man
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|