Thirukural

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி - உண்பார்க்கு நல்ல உணவுகளை உளவாக்கி; துப்பார்க்குத் துப்பு ஆயதூஉம் மழை - அவற்றை உண்கின்றார்க்குத் தானும் உணவாய் நிற்பதூஉம் மழை. (தானும் உணவாதலாவது, தண்ணீராய் உண்ணப்படுதல். சிறப்பு உடைய உயர்திணை மேல் வைத்துக் கூறினமையின், அஃறிணைக்கும் இஃது ஒக்கும். இவ்வாறு உயிர்களது பசியையும் நீர்வேட்கையையும் நீக்குதலின் அவை வழங்கி வருதலுடையவாயின என்பதாம்.)
மணக்குடவர் உரை:
பிறிதொன்றுண்பார்க்கு அவருண்டற்கான வுணவுகளையு முண்டாக்கித் தன்னை யுண்பார்க்குத் தானே உணவாவதும் மழையே. இது பசியைக் கெடுக்கு மென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி - உண்பார்க்கு நல்ல வுணவுகளை உண்டாக்கி; துப்பார்க்கு - அவற்றை உண்பவர்க்கு; துப்பாயதும் மழை - தானும் உணவாவது மழையே. இருதிணை யறுவகை யுயிர்கட்கும் உணவு இன்றியமையாததேனும், தலைமைபற்றித் துப்பார் என உயர்திணைமேல் வைத்துக் கூறினார். முந்தின குறளில் அமிழ்தம் என ஒன்றாகக் கூறியதை, இக்குறளில் நீரும் உணவும் என இருவகையாக வகுத்தார். உணவென்றது உண்பனவும் தின்பனவும் பருகுவனவும் நக்குவனவுமான நால்வகை விளைபொருட்களை, சோறுங் களியுமாகச் சமைக்கப் பெறும் நெல் புல் (கம்பு) முதலியன உண்பன; காய்கறிகள் தின்பன; பாலும் பதனீரும் (தெளிவும்) பருகுவன; தேனும் நெகிழ்நிலைப் பயினும் நக்குவன. மழை உணவுப்பொருளை விளைப்பதொடு தானும் நீராக உண்ணப்படுவது என்று அதன் சிறப்புக் கூறப்பட்டது. துத்தற்சொல் நான்முறை வந்தது சொற்பொருட் பின்வருநிலையணி. "துப்பாய துப்பாக்கி" என்பது சொற்பின் வருநிலையணி. துப்பாய தூஉம் என்பது இசைநிறை யளபெடை.
கலைஞர் உரை:
யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி, அரிய தியாகத்தைச் செய்கிறது.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
எப்படி யென்றால், உணவினால் உயிர் வாழ வேண்டிய மனிதர் களுக்கு உணவை உற்பத்தி செய்வதும், அந்த உணவை உண்ணும்போது தாகம் தீர்க்கத்தானே ஓர் உணவாக உதவுவதும் மழைத் தண்ணீர் தான்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
உண்பவர்களுக்கு நல்ல உணவுகளை உண்டாக்கிக் கொடுப்பது, தானும் உண்பவர்களுக்கு உணவாக இருப்பதும் மழையேயாகும்.
தமிழ்க்குழவி உரை:
உலகில் வாழ்பவர்க்கு உணவுப் பொருட்களை உற்பத்திச் செய்ய ஆதாரமாவதும் தானே குடிநீராம் உணவாகி உயிர்களைக் காப்பதும் எல்லாம் மழையே.
Translation
The rain makes pleasant food for eaters rise; As food itself, thirst-quenching draught supplies.
Explanation
Rain produces good food, and is itself food.
Transliteration
Thuppaarkkuth Thuppaaya Thuppaakkith Thuppaarkkuth Thuppaaya Thooum Mazhai

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 12