|
யான் விரும்பிய காதலர் மீண்டு வந்து அன்பு செய்யமாட்டார் என்றாலும், அவரைப் பற்றிய புகழைக் கேட்பதும் என் செவிக்கு இன்பமாக இருக்கின்றது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இதுவும் அது.) நசைஇயார் நல்கார் எனினும் - என்னால் நச்சப்பட்ட காதலர் என்மாட்டு அன்பிலரேயாயினும்; அவர்மாட்டு இசையும் செவிக்கு இனிய - அவர் திறத்து யாதானும் ஓர் சொல்லும் என் செவிக்கு இனியவாம்.(இழிவு சிறப்பு உம்மை, 'அவர் வாரார் என்னுஞ் சொல்லாயினும் அமையும்' என்பதுபட நின்றது. 'அதுவும் பெற்றிலேன்'என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
எம்மால் காதலிக்கப்பட்டார் எமக்கு அருளாராயினும் அவர் பக்கத்தனவாகிய சொற்களும் எங்கள் செவிக்கு இனியவாம்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நசைஇயார் நல்கார் எனினும்-என்னால் விரும்பப்பட்ட காதலர் என்பால் அன்பில்லாதவரே யாயினும்; அவர் மாட்டு இசையும் செவிக்கு இனிய-அவரிடத்தினின்று வரும் எத்தகைச் செய்திகளும் என் செவிக்கு இன்பந்தருவனவாம். இழிவு சிறப்பும்மை, அவர் அண்மையில் வருகின்றிலர் என்னும் செய்தியாயினும் என்பது படநின்றது, அதுவும் பெற்றிலேன் என்பது கருத்து. 'ந சை இ' சொல்லிசையளபெடை. 'இசை' ஆகுபெயர்.
|
|
கலைஞர் உரை:
|
|
என் அன்புக்குரியவர் என்னிடம் அன்பு காட்டாதவராகப் பிரிந்து இருப்பினும், அவரைப் பற்றிய புகழ் உரை என் செவிக்குச் செந்தேனாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நான் காதலிக்கும் என் கணவர் என்மீது அன்பற்றவர்தாம் என்றாலும், அவரிடம் இருந்து வரும் எந்தச் சொல்லும் என் செவிக்கு இனிமையானதே.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
நான் காதலிக்கிற என் கணவர் (தாமாக ஒரு சேதியனுப்பி) உதவாவிட்டாலும் அவரைப்பற்றி வேறு யாராயினும் ஒரு சேம வார்த்தை சொன்னாலும், அது எனக்கு ஆறுதல் அளிக்குமே.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
என்னால் விரும்பிக் காதலிக்கப்பட்ட காதலர் என்னிடம் அன்பில்லாதவரேயானாலும், அவரிடமிருந்து வருகின்ற எந்த ஒருசொல்லும் எனது செவிக்கு இனிமை தருவதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நான் விரும்பும் காதலர் என்பால் அன்பு பாராட்டாத சூழலிலும் அவர் பற்றிய பெருமையைப் பிறர் பேசக் கேட்பது இனிமையானது.
|
|
Translation
|
|
Though he my heart desires no grace accords to me,
Yet every accent of his voice is melody.
|
|
Explanation
|
|
Though my beloved bestows no love on one, still are his words sweet to my ears.
|
|
Transliteration
|
|
Nasaiiyaar Nalkaar Eninum Avarmaattu
Isaiyum Iniya Sevikku
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|