|
காம நோயையும் பசலை நிறத்தையும் எனக்குக் கைம்மாறாக கொடுத்து விட்டு, என் சாயலையும் நாணத்தையும் அவர் என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
('அழகும் நாணும் அழியாமல் நீ ஆற்றல் வேண்டும்', என்ற தோழிக்குச் சொல்லியது.) கைம்மாறா நோயும் பசலையும் தந்து - பிரிகின்ற ஞான்றே அவ்விரண்டற்கும் தலைமாறாக இக்காமநோயினையும் பசலையையும் எனக்குத் தந்து; சாயலும் நாணும் அவர் கொண்டார் - என் மேனியழகினையும் நாணினையும் அவர் கொண்டு போயினார். (எதிர் நிரல் நிறை. 'அடக்குந்தோறும் மிகுதலான், நோய் நாணிற்குத் தலைமாறாயிற்று. இனி அவர் தந்தாலல்லது அவை உளவாகலும் இவை இலவாகலும் கூடா', என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
மென்மையும் நாணமும் அவர் கொண்டு போனார்; அதற்கு மாறாக நோயையும் பசலையும் தந்து. மென்மை- பெண்மை. இது தலைமகள் வெருட்சிகண்டு அது பெண்மையும் நாணமும் உடையார் செயலன்றென்று கடிந்து கூறிய தோழிக்கு அவள் ஆற்றாமைற் கூறியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
(அழகும் நாணும் அழியாமல் நீயாற்றல் வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.) நோயும் பசலையும் கைம்மாறாத் தந்து- நம் காதலர் நம்மைவிட்டுப் பிரியும் போதே இக்காம நோயையும் பசலையையும் எதிரீடாகத் தந்துவிட்டு; சாயலும் நாணும் அவர் கொண்டார்-என் மேனியழகையும் நாணையும், தம்முடன் கொண்டுபோய் விட்டார். அவர் திரும்பி வந்தாலொழிய என் மேனியழகும் நாணும் திரும்பாவென்பதாம்.சாயலுக்குப் பசலையும் நாணுக்கு நோயும் ஈடாதலால் எதிர்நிரனிறை.
|
|
கலைஞர் உரை:
|
|
காதல் நோயையும், பசலை நிறத்தையும் கைம்மாறாகக் கொடுத்து விட்டு அவர் என் அழகையும், நாணத்தையும் எடுத்துக் கொண்டு பிரிந்து சென்று விட்டார்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
அவர் என்னைப் பிரிகிறபோதே உள்ளத் துன்பத்தையும் பசலையையும் எனக்குக் கொடுத்துவிட்டு அவற்றுக்கு ஈடாக என் அழகையும் வெட்கத்தையம் கொண்டு போய்விட்டார்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஆனாலும்) துன்பத்தையும் பசலை நிறத்தையும் எனக்குத் தந்துவிட்டு அவற்றிற்குப் பதிலாக என் அழகையும் நாணத்தையும் அவர் கொண்டு போய்விட்டாரே!
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
எனது தலைவர் பிரிந்தபோது காம நோயினையும் பசலை நிறத்தினையும் எனக்குத் தந்துவிட்டு எனது உடம்பின் அழகினையும் நாணத்தினையும் அவர் கொண்டு சென்றார்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பிரிகின்ற போது காதல் மற்றும் பசலை நோயை எமக்குத் தந்து விட்டு என் அழகையும் நாணையும் காதலர் எடுத்துச் சென்று விட்டாரோ?
|
|
Translation
|
|
Of comeliness and shame he me bereft,
While pain and sickly hue, in recompense, he left.
|
|
Explanation
|
|
He has taken (away) my beauty and modesty, and given me instead disease and sallowness.
|
|
Transliteration
|
|
Saayalum Naanum Avarkontaar Kaimmaaraa
Noyum Pasalaiyum Thandhu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|