|
( பிரிந்து துன்புறுகின்ற) இந்நாட்களில் நெடுநேரம் உடையனவாய்க் கழிகின்ற இராக்காலங்கள், பிரிந்த கொடியவரின் கொடுமையை விடத் தாம் கொடியவை.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இதுவும் அது.) இந்நாள் நெடிய கழியும் இரா - காதலரோடு நாம் இன்புற்ற முன்னாள்களிற் குறியவாய், அவர் பிரிவாற்றேமாகின்ற இந்நாள்களிலே நெடியவாய்ச் செல்கின்ற கங்குல்கள்; கொடியார் கொடுமையின் தாம் கொடிய - அக்கொடியாரது கொடுமைக்கு மேலே தாம் கொடுமை செய்யாநின்றன. (தன்னாற்றாமை கருதாது பிரிதலின், 'கொடியார்' என்றாள். கொடுமை: கடிதின் வாராது நீட்டித்தல். அவர் பிரிவானும் நீட்டிப்பானும் உளதாய ஆற்றாமைக்குக் கண்ணோடாமை மேலும் பண்டையின் நெடியவாய்க் கொடியவாகாநின்றன என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
கொடியவர் செய்த கொடுமையினும் தாம் கொடியனவாய் நின்றன: இக்காலத்து நெடியவாய்க் கழிகின்ற இராப்பொழுதுகள். இது பொழுது விடிகின்றதில்லை யென்று தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
இரா இந்நாள் நெடிய கழியும் - முன்பு நம் காதலரொடு கூடி யின்புற்ற நாட்களிலெல்லாம் குறிய வாயிருந்த இரவுகள், இன்று அவரினின்று பிரிந்து துன்புறுங் காலத்தில் மிக நீண்டு செல்கின்றனவா யுள்ளன ; கொடியார் கொடுமையின் தாம் கொடிய - ஆதலால், அக் கொடியார் கொடுமையினும் மிஞ்சிய கொடுமை செய்வனவாகும். தன் ஆற்றாமை கருதாது பிரிந்தமையின் ' கொடியார் ' என்றும், வரவு நீட்டித்தமையின் 'கொடுமை ' என்றும், தன் துன்பங்கண்டிரங்காமையானும் முன்னினும் நெடியவாய்க் கழிந்தமையானும் ' கொடுமையிற்றாங்கொடிய' என்றும், கூறினாள்.
|
|
கலைஞர் உரை:
|
|
இந்த இரவுகள் நீண்டுகொண்டே போவதுபோல் தோன்றும் கொடுமை இருக்கிறதே அது காதலரின் பிரிவால் ஏற்படும் கொடுமையைவிடப் பெரிதாக உள்ளது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
இப்போதெல்லாம் இரவுகள் கழிவதற்கு நெடும்பொழுது ஆகிறது; என்னைப் பிரிந்து போன என் கணவரின் கொடுமையிலும் இவை மிகக் கொடுமையாக இருக்கின்றன.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(என் காதலர் என்னுடன் இல்லாத) இந்த நாட்களில் இரவும் மிகவும் நீண்ட நேரம் தாமதித்து விடிகின்றது; அதனால் என்னைப் பிரிந்து என் காதலர் எனக்குச் செய்துவிட்ட கொடுமைகளை விட இந்த இரவு அதிகம் கொடுமை செய்கிறது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தலைவன் பிரிந்திருக்கும் இந்நாட்களில் இரவுப் பொழுதுகள் நெடியவாய்க் கழிகின்றன; தலைவன் செய்கின்ற கொடுமைகளைவிடக் கொடுமை செய்கின்றன.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பிரிந்து சென்ற காதலர் செய்யும் கொடுமையை விட விடியாமல் நெடியதாக நீண்டுச் செல்லும் இவ்விராப் பொழுது மிகவும் கொடுமையானதாகத் தோன்றுகிறது.
|
|
Translation
|
|
More cruel than the cruelty of him, the cruel one,
In these sad times are lengthening hours of night I watch alone.
|
|
Explanation
|
|
The long nights of these days are far more cruel than the heartless one who is torturing me.
|
|
Transliteration
|
|
Kotiyaar Kotumaiyin Thaamkotiya Innaal
Netiya Kazhiyum Iraa
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|