|
காமம் மகிழ்விக்கும்போது அதன் இன்பம் கடல் போன்றது; அது வருத்தும்போது அதன் துன்பமோ கடலைவிடப் பெரியது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
('காமத்தான் இன்பமுற்றார்க்கு அதனினாய துன்பமும் வரும்', என்ற தோழிக்குச் சொல்லியது.) காமம் இன்பம் கடல் - காமம் புணர்வால் இன்பஞ்செய்யுங்கால் அவ்வின்பம் கடல் போலப் பெரிதாம்; மற்று அஃது அடுங்கால் துன்பம் அதனிற் பெரிது - இனி அது தானே பிரிவால் துன்பஞ் செய்யுங்கால், அத்துன்பம் அக்கடலினும் பெரிதாம். ('மற்று' வினைமாற்றின்கண் வந்தது. 'அடுங்கால்' என வந்தமையின், மறுதலை யெச்சம் வருவிக்கப்பட்டது. பெற்ற இன்பத்தோடு ஒத்து வரின் ஆற்றலாம்; இஃது அதனது அளவன்று என்பது கருத்து.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
காமப்புணர்வினால் நமக்குவரும் இன்பம் கடல்போலப் பெரிது; பிரிவினான். அஃது அடுங்காலத்து வருந்துன்பம் அக்கடலினும் பெரிது. இஃது இன்பமுற்றார் துன்பமுறுதல் உலகியலென்று ஆற்றுவித்த தோழிக்கு ஆற்றலரிதென்று தலைமகள் கூறியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
(காமத்தால் இன்பம் நுகர்ந்தவர் அதனால் வருந்துன்பத்தையும் பொறுத்தல் வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.) காமம் இன்பம் கடல் - காமம் புணர்வால் இன்பஞ் செய்யும்போது , அவ்வின்பம் கடல்போற் பெரிதாம்; மற்று அஃது அடுங்கால் துன்பம் அதனிற் பெரிது - பின்பு அதுதானே பிரிவால் துன்பஞ் செய்யும்பொழுது , அத்துன்பம் அக்கடலினும் பெரிதாம். காமத்தால் வரும் இன்பமுந் துன்பமும் அளவொத்திருப்பின் ஆற்றலாம் . துன்பம் இன்பத்தினும் மிகுத்திருப்பதால் ஆற்றுமாறில்லை யென்பதாம். 'மற்று' வினைமாற்று அல்லது பின்மைப் பொருளில் வந்த்து. 'அடுங்கால் ' என்று பின்றொடரில் வந்தமையால் , அதன் மறுதலை யெச்சம் முன்றொடர்க்கு வருவிக்கப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
காதல் இன்பம் கடல் போன்றது. காதலர் பிரிவு ஏற்படுத்தும் துன்பமோ, கடலைவிடப் பெரியது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
காதல் மகிழ்ச்சி கடல்போலப் பெரிது; ஆனால் பிரிவினால் அது துன்பம் செய்யத் தொடங்கிவிட்டால் அத்துன்பம் கடலைக் காட்டிலும் பெரிது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(காதலர் என்னுடன் இருக்கும்போது) எனக்கு வரும் காம உணர்ச்சி மிகப் பெரிய இன்பக் கடலாக இருந்தது. அவர் என்னுடன் இல்லாத இப்போது எனக்கு வரும் காம உணர்ச்சி அந்த இன்பக் கடலை விடப் பெரிய துன்பக் கடலாக இருக்கிறது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
காமம் இன்பம் செய்கின்றபோது அந்த இன்பம் கடல் போலப் பெரிதாக இருக்கின்றது. அந்தக் காமம் பிரிவினால் துன்பம் செய்யுங்கால் அத்துன்பம் கடலினைவிடப் பெரிதாக இருக்கின்றது.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
காதலால் பெறுகின்ற இன்பமானது கடலளவு பெரிதாகத் தோன்றுகிறது. ஆனால் பிரிவால் ஏற்படுகின்ற துன்பமானது கடலினும் பெரிதாகத் தோன்றுகிறது.
|
|
Translation
|
|
A happy love 's sea of joy; but mightier sorrows roll
From unpropitious love athwart the troubled soul.
|
|
Explanation
|
|
The pleasure of lust is (as great as) the sea; but the pain of lust is far greater.
|
|
Transliteration
|
|
Inpam Katalmatruk Kaamam Aqdhatungaal
Thunpam Adhanir Peridhu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|