Thirukural

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்திருநுதற்கு இல்லை இடம்.

என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இடந்தலைப்பாட்டின்கண் தலைமகள் நீக்கத்துச் சொல்லியது.) கருமணியிற் பாவாய் நீ போதாய் - என் கண்ணிற் கருமணியின்கண் உறையும் பாவாய், நீ அங்கு நின்றும் போதருவாயாக; யாம் வீழும் திருநுதற்கு இடம் இல்லை - போதராதிருத்தியாயின் எம்மால் விரும்பப்பட்ட திருநுதலையுடையாட்கு இருக்க இடமில்லையாம். ('யான் காணாது அமையாமையின் இவள் புறத்துப் போகற்பாலளன்றி என் கண்ணுள் இருக்கற்பாலள்; இருக்குங்கால் நின்னோடு ஒருங்கு இருக்க இடம் போதாமையின், நின்னினும் சிறந்த இவட்கு இடத்தைக் கொடுத்து நீ போதுவாயாக' என்பதாம்.)
மணக்குடவர் உரை:
என் கண்ணுட் கருமணியகத்து நிற்கும் பாவாய்! நீ அங்கு நின்று போதுவாயாக, எம்மால் விரும்பப்பட்ட அழகிய நுதலினையுடையாட்கு இருத்தற்கிடம் போதாது.
தேவநேயப் பாவாணர் உரை:
( இடந்தலைப் பாட்டின்கண் தலைமகள் நீக்கத்துச் சொல்லியது . ) திருமணியில் பாவாய் - என் கண்ணின் கருமணியின்கண் தங்கும் பாவையே ! நீ போதாய் - நீ அவ்விடத்தை விட்டுப் போவாயாக ; யாம் வீழும் திருநுதற்கு இடம் இல்லை - ஏனெனின் , எம்மால் விரும்பப்படும் அழகிய நெற்றியை யுடையாட்கு இருக்க வேறிடமில்லை . யான் இவளைக் காணாதிருத்தல் கூடாமையின் , என்றும் என் கண்ணிற்குள்ளேயே இருக்கத் தக்காள் . அதற்குள் இருவர் இருக்க இடமின்மையின் , உன்னினுஞ் சிறந்த இவட்கு அவ்விடத்தைக் கொடுத்துவிட்டு நீ வெளியேறிவிடுவாயாக என்று , தன் மறவாக் காதலைத் தெரிவித்த வாறாம் . ' யாம் ' பெருமிதப் பன்மை அல்லது அரசப்பன்மை . ' திருநுதல் ' அன்மொழித்தொகை .
கலைஞர் உரை:
நான் விரும்புகின்ற அழகிக்கு என் கண்ணிலேயே இடம் கொடுப்பதற்காக என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! அவளுக்கு இடமளித்து விட்டு நீ போய்விடு!.
சாலமன் பாப்பையா உரை:
என் கருமணிக்குள் இருக்கும் பாவையே! நீ அதை விட்டுப் போய்விடு; நான் விரும்பும் என் மனைவிக்கு என் கண்ணுக்குள் இருக்க இடம் போதவில்லை.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
என் கண்ணின் கருமணியில் இருக்கிற பாவையே! நீ தூரப் போ. நான் காதலிக்கிற இந்த அழகான பெண்ணை நீ இருக்கிற இடத்தில் வைக்க விரும்புகிறேன்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
கண்களில் இருக்கும் கருமணிகளில் உள்ள பாவையே! நீ அங்கிருந்து போவாயாக! போகாதிருந்தால் எம்மால் காதலிக்கப்பட்ட அழகிய நுதலினையுடைய பெண்ணுக்கு இருக்க இடமில்லாமற் போகும்.
தமிழ்க்குழவி உரை:
கண்ணின் மணியிலுள்ள பாவையே, நீ அங்கிருந்து சென்று விடு, யாம் பெரிதும் விரும்பும் எம் காதலிக்குத் தங்க வேறு இடம் இல்லை.
Translation
For her with beauteous brow, the maid I love, there place is none; To give her image room, O pupil of mine eye, begone!
Explanation
O you image in the pupil (of my eye)! depart; there is no room for (my) fair-browed beloved.
Transliteration
Karumaniyir Paavaainee Podhaayaam Veezhum Thirunudharku Illai Itam

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1123