|
காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல், ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவருக்கும் இனிமை உடையதாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(ஒத்த அன்புடைய நுமக்கு ஒரு பொழுதும் விடாத முயக்கமே இனியது என வரைவுகடாய தோழிக்குச் சொல்லியது.) (நீ சொல்லுகின்ற தொக்கும்) வளி இடை போழப்படா முயக்கு - ஒரு பொழுதும் நெகிழாமையின் காற்றால் இடையறுக்கப்படாத முயக்கம்; வீழும் இருவர்க்கு இனிதே - ஒருவரையொருவர் விழைவார் இருவர்க்கும் இனிதே. (முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. 'ஈண்டு இருவர் இல்லை இன்மையான், இஃது ஒவ்வாது' என்பது கருத்து. களவிற்புணர்ச்சியை மகிழ்ந்து வரைவு உடன்படான் கூறியவாறு.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
ஒத்த காதலுடையா ரிருவர்க்கும் இனிதாம்; காற்றால் இடை யறுக்கப்படாத முயக்கம். இது புணர்ச்சி விருப்பினால் கூறினமையால் புணர்ச்சி மகிழ்தலாயிற்று. இது குறிப்பினால் புகழ்ந்தது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
[இருவர்க்கும் இடையீடு படாத முயக்கு இல்லறத்திலேயே இயலுமென்று வரைவுகடாவின தோழிக்குச் சொல்லியது.] (நீ சொல்வ தொக்கும்;) வளி இடை போழப்படா முயக்கு - ஓருடம் பென்னுமாறு இறுக ஒன்றியமையால் காற்றா லிடையறுக்கப்படாத தழுவல் ; வீழும் இருவர்க்கு இனிதே - ஒரு வரை யொருவர் விழையும் இருவர்க்கும் இன்பந் தருவதே. தோழி நாளிடையீடு குறித்துச் சொன்னதற்கு மாறாகத் தலைமகன் காற்றிடையீடு குறித்துச் சொல்லியும் , அவள் உடம்பு பற்றி இருவர் எனக் கொண்டதை அவன் காதல் பற்றி உயிரால் ஒருவர் எனக் கொண்டு மறுத்தும் கோணை யுறழ் (வாதம்) செய்தவாறு. இதனால் வரைவுடம் படாமை தெரிவித்தான் முற்றுமை செய்யுளால் தொக்கது . ஏகாரம் தேற்றம் , ' படாஅ ' இசைநிறையளபெடை , வரைவு கடாதலாவது வெளிப்படையான கரணச்சடங்கொடு இல்லற வாழ்க்கை தொடங்குமாறு வேண்டுதல்.
|
|
கலைஞர் உரை:
|
|
காதலர்க்கு மிக இனிமை தருவது, காற்றுகூட இடையில் நுழைய முடியாத அளவுக்கு இருவரும் இறுகத் தழுவி மகிழ்வதாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
இறுக அணைத்துக் கிடப்பதால் காற்றும் ஊடே நுழைய முடியாதபடி கூடிப் பெறும் சுகம், விரும்பிக் காதலிப்பார் இருவர்க்கும் இனிமையானதே.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அப்படி விட்டுப் பிரியாமல் கட்டித் தழுவிக்கொண்டே யிருப்பதை நான்மட்டுமல்ல. என் காதலியும் விரும்புகிறாள்.) இடையில் காற்றுக்கூடப் புகுந்து பிளவுண்டாக்க முடியாதபடி இறுகத் தழுவிக்கொண்டிருப்பது ஒருவரையொருவர் காதலிக்கின்ற இருவரும் விரும்புகின்ற இன்பம்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஒரு பொழுதும் நெகிழமையால் காற்று இடையில் புகாமல் தழுவுதல் ஒருவரையொருவர் விரும்புகின்ற இருவர்க்கும் இன்பம் தருவதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
காற்றும் இடையே நுழைய முடியாத அளவில் நெருங்கித் தழுவும் கூடல் காதல்வயப்பட்ட இருவர்க்கும் பேரின்பம் தருவதாகும்.
|
|
Translation
|
|
Sweet is the strict embrace of those whom fond affection binds,
Where no dissevering breath of discord entrance finds.
|
|
Explanation
|
|
To ardent lovers sweet is the embrace that cannot be penetrated even by a breath of breeze.
|
|
Transliteration
|
|
Veezhum Iruvarkku Inidhe Valiyitai
Pozhap Pataaa Muyakku
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|