|
என்னை நோக்கினாள், யான் கண்டதும் நோக்கித் தலைகுனிந்தால், அது அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(நோக்கினாலும் நாணினாலும் அறிந்தது.) நோக்கினாள் - யான் நோக்கா அளவில் தான் என்னை அன்போடு நோக்கினாள்; நோக்கி இறைஞ்சினாள் -நோக்கி ஒன்றனை யுட்கொண்டு நாணி இறைஞ்சினாள்; அஃது யாப்பினுள் அவள் அட்டிய நீர் - அக்குறிப்பு இருவேமிடையும் தோன்றிய அன்புப்பயிர் வளர அதன்கண் அவள் வார்த்த நீராயிற்று. (அஃது என்னும் சுட்டுப்பெயர், அச்செய்கைக்கு ஏதுவாய குறிப்பின்மேல் நின்றது. யாப்பினான் ஆயதனை, 'யாப்பு' என்றார். ஏகதேச உருவகம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
முற்பட நோக்கினாள், நோக்கினபின்பு நாணினாள். அஃது அவள் நட்புப்பயிர் வளர அதன்கண் வார்த்த நீர். தலைமகள் நாண் போகாமைக்குக் காரணங் கூறியவாறாம்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
(தலைமகள் காதலை நோக்கினாலும் நாணினாலும் அறிந்தது.) நோக்கினாள்- நான் நோக்காதபோது அவள் என்னை அன்புடன் நோக்கினாள் ;நோக்கி இறைஞ்சினாள்- அங்ஙனம் நோக்கினவள் உடனே ஒன்றைக் கருதி நாணங்கொண்டு என்னை வணங்குவாள் போலத் தலைகுனிந்தாள்; அஃது அவள் யாப்பினுள் அட்டிய நீர் -அச்செயல் எம் மிருவேமையும் பிணிக்கும் காதற்பயிர் வளர அவள் வார்த்த நீராகும். யாக்கும் அன்பை யாப்பென்றார்.யாப்பைப் பயிராக வுருவகியாமையின் இது ஒரு மருங்குருவகம்.
|
|
கலைஞர் உரை:
|
|
கடைக்கண்ணால் அவள் என்னைப் பார்த்த பார்வையில் நாணம் மிகுந்திருந்தது; அந்தச் செயல் அவள் என்மீது கொண்ட அன்புப் பயிருக்கு நீராக இருந்தது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நான் பார்க்காதபோது, என்னைப் பார்த்தாள்; பார்த்து நாணத்தால் தலைகுனிந்தாள்; இந்த செயல் எங்களுக்குள் காதல் பயிர் வளர அவள் ஊற்றிய நீராகும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அப்படிக் கண்களைச் சுருக்கிப் பார்த்த இவள் தனக்கும் காம ஆசை உண்டாகி யிருப்பதை உறுதிப்படுத்துவபோல) என்னைச் சிறு பார்வையாகப் பார்த்தாள். உடனே தலை குனிந்து கொண்டாள். இவள் அப்படிச் செய்தது, சம்மதம் என்ற பயிருக்கு நீர் பாய்ச்சியது போல் இருந்தது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
யான் நோக்காதிருக்கும் போது அவள் என்னை அன்போடு நோக்கினாள். நோக்கி ஒன்றனை மனதிற்கொண்டு நாணத்துடன் தலை குனிந்தாள். அக்குறிப்பு எங்களிடம் உண்டான அன்பாகிய பயிர் வளர நீர் வார்த்தது போலாயிற்று.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பார்த்தாள்; நான் பார்த்தலும் தலையைக் கவிழ்ந்து கொண்டாள் அப்பார்வையும் நாணமும் காதல் பயிரை வளர்க்கும் நீராக அமைகிறது.
|
|
Translation
|
|
She looked, and looking drooped her head:
On springing shoot of love 'its water shed! .
|
|
Explanation
|
|
She has looked (at men) and stooped (her head); and that (sign) waters as it were (the corn of) our love.
|
|
Transliteration
|
|
Nokkinaal Nokki Irainjinaal Aqdhaval
Yaappinul Attiya Neer
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|