|
வாழ வழி இல்லாத போதும் இரந்து கேட்க உடன்படாத சால்பு, உலகத்தில் இடமெல்லாம் கொள்ளாத அவ்வளவு பொருமையுடையதாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
இடம் இல்லாக்காலும் இரவு ஒல்லாச் சால்பு - நுகரவேண்டுவன இன்றி நல்கூர்ந்தவழியும் பிறர்பாற் சென்று இரத்தலை உடம்படாத அமைதி; இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே - எல்லாவுலகும் ஒருங்கு இயைந்தாலும் கொள்ளாத பெருமையுடைத்து. (அவ்விரத்தலைச் சால்பு விலக்குமாகலின், இரவு ஒல்லாமை அதன்மேல் ஏற்றப்பட்டது. இதனான் அந்நெறியல்லதனைச் சால்புடையார் செய்யார் என்பது கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தஞ்சுற்றத்தளவு தமக்கு வருவாய் இல்லாக் காலத்தினும் பிறரை இரத்தற்கு இசையாத சால்பு, அகன்ற உலகமெல்லாம் கொள்ளாத பெருமையே யுடைத்து. இஃது இரவாதார் பெரிய ரென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
இடம் இல்லாக்காலும் இரவு ஒல்லாச் சால்பு-ஒரு சிறிதும் பொருளில்லாக் காலத்தும் பிறரிடம் சென்று இரத்தலை யுடம்படாத குணநிறைவு; இடம் எல்லாம் கொள்ளாத் தகைத்தே-உலகங்களெல்லாம் ஒன்றாகக் கூடினும் அவற்றில் இட்டுவைக்கும் இடமெல்லாம் கொள்ளாத பெருமையை யுடையதாம். மானமும் பெருமையும் நாணும் சால்பின் உறுப்புக்களாதலின், அவை இரவை அறவே தடுக்குமென்பதாம். இடம் உலகில்வாழ இடந்தருஞ் செல்வம். இடம்-இடன், கடைப்போலி. "இடனில் பருவத்தும்" (குறள்,218) என்றமை காண்க. ஏகாரம் தேற்றம், உம்மை இழிவு சிறப்பு.
|
|
கலைஞர் உரை:
|
|
வாழ்வதற்கு ஒரு வழியும் கிடைக்காத நிலையிலும் பிறரிடம் கையேந்திட நினைக்காத பண்புக்கு, இந்த வையகமே ஈடாகாது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஏதும் இல்லாமல் வறுமை உற்றபோதும் பிறரிடம் சென்று பிச்சை கேட்கச் சம்மதியாத மன அடக்கம், எல்லா உலகும் சேர்ந்தாலும் ஈடாகாத பெருமையை உடையது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
பணத்திற்கு வழியே இல்லாத காலத்திலுங்கூடப் பிச்சை கேட்க இணங்காத பெருங்குணம் (அண்டங்களெல்லாம் அடங்கிய) ஆகாய வெளி முழுதும் சேர்ந்தாலும் போதாது என்னும்படி அவ்வளவு பெரியது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நுகரவேண்டுவன இல்லாமல் வறுமையுற்றபோதும் பிறரிடம் சென்று இரத்தலுக்கு உடன்படாத பெருந்தன்மை, எல்லா உலகும் ஒருங்கு சேர்ந்தாலும் சொள்ளாத, பெருமை உடைத்து.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
வறுமையில் உழல்கின்ற போதும் பிறரிடம் சென்று இரந்து நில்லாத பெருமை, உலகம் முழுவதும் பாராட்டுதற்குரியது.
|
|
Translation
|
|
Who ne'er consent to beg in utmost need, their worth
Has excellence of greatness that transcends the earth.
|
|
Explanation
|
|
Even the whole world cannot sufficiently praise the dignity that would not beg even in the midst of destitution.
|
|
Transliteration
|
|
Itamellaam Kollaath Thakaiththe Itamillaak
Kaalum Iravollaach Chaalpu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|