|
உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் - உழுதலான் வரும் மெய் வருத்தம் நோக்கிப் பிறதொழில்களைச் செய்து திரிந்தும், முடிவில் ஏர் உடையார் வழியதாயிற்று உலகம்; அதனால் உழந்தும் உழவே தலை - ஆதலான் எலலா வருத்தம் உற்றும், தலையாய தொழில் உழவே. (ஏர் - ஆகுபெயர். பிற தொழில்களால் பொருளெய்திய வழியும், உணவின் பொருட்டு உழுவார்கண் செல்ல வேண்டுதலின், 'சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' என்றும், வருத்தமிலவேனும் பிற தொழில்கள் கடை என்பது போதர, 'உழந்தும் உழவே தலை' என்றும் கூறினார். இதனால் உழவினது சிறப்புக் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
உழவு ஒழிந்த எல்லா நெறிகளிலும் சுழன்று திரிந்தாலும் ஏருடையவர் வழியே வருவர் உலகத்தார்: ஆதலான் வருந்தியும் உழுதலே தலைமையுடையது. இஃது உழவு வேண்டுமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
சுழன்றும் உலகம் ஏர்ப் பின்னது- உழவுத் தொழிலால் உண்டாகும் உடல் வருத்தம் நோக்கி வேறு பல்வகைத் தொழில்களைச் செய்து திரிந்தாலும், அதன் பின்னும் வேளாரல்லாத உலகத்தா ரெல்லாரும் உழவுத் தொழிலின் வழிப்பட்டவரே; அதனால் உழந்தும் உழவே தலை- ஆதலால், எல்லா வருத்தமுமுற்றும் உழவுத் தொழிலே உலகில் தலையாயதாம். பிற தொழில்களாற் பொருள் தேடிய பின்பும் , உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவின்பொருட்டு உழவரிடமே செல்ல வேண்டியிருத்தலின், 'சுழன்று மேர்ப் பின்ன துலகம'் என்றும், பிற தொழில்கள் வருத்தமின்றிச் செய்வன வேனும் கடைப்பட்டவையென்பது தோன்ற 'உழவே தலை' என்றும் கூறினார். 'ஏர்' ஆகு பெயர். 'உலகம்' வரையறுத்த ஆகுபெயர். ஏகாரம் பிரிநிலை உம்மை யிரண்டனுள், முன்னது எச்சத்தின் பாற்பட்ட பின்மை; பின்னது இழிவின் பாற்பட்ட ஒத்துக்கொள்வு.
|
|
கலைஞர் உரை:
|
|
பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
உழவுத் தொழிலில் இருக்கும் நெருக்கடிகளை எண்ணி, வேறு வேறு தொழிலுக்குச் சென்றாலும் உலகம் ஏரின் பின்தான் இயங்குகிறது. அதனால் எத்தனை வருத்தம் இருந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
எப்படி யெல்லாம் சுற்றிச் சுற்றி எண்ணிப் பார்த்தாலும். உலகத்திலுள்ள மனிதர்கள் உழவுத் தொழிலைப் பின்பற்றித்தான் உயிர் வாழ முடியும். அதனால் உழைப்பு மிகுந்த தொழிலானாலும் உழவுத் தொழில்தான் எல்லாத் தொழில்களிலும் மேலான தொழில்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பிற தொழில்களைச் செய்து திரிந்தும் முடிவில் ஏருடையார் வழியாயிற்று இந்த உலகம். ஆதலால் எல்லாரும் வருத்தமுற்றாலும் தலைமையான தொழில் உழவேயாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
சுழல்கின்ற உலகம் ஏர்த் தொழிலின் பின்னேயே செல்கிறது. அதனால் எத்தனைத் துயர்கள் இருப்பினும் இவ்வுலகிற்கு உழவுத்தொழிலே தலையாயது.
|
|
Translation
|
|
Howe'er they roam, the world must follow still the plougher's team;
Though toilsome, culture of the ground as noblest toil esteem.
|
|
Explanation
|
|
Agriculture, though laborious, is the most excellent (form of labour); for people, though they go about (in search of various employments), have at last to resort to the farmer
|
|
Transliteration
|
|
Suzhandrumerp Pinnadhu Ulakam Adhanaal
Uzhandhum Uzhave Thalai
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|