|
மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
அகத்து நாண் இல்லார் இயக்கம் - தம் மனத்தின்கண் நாண் இல்லாத மக்கள் உயிருடையார் போன்று இயங்குகின்ற இயக்கம்; மரப்பாவை நாணால் உயிர் மருட்டியற்று - மரத்தாற் செய்த பாவை இயந்திரக் கயிற்றினானாய தன் இயக்கத்தால் உயிருடைத்தாக மயங்கினாற்போலும். (கருவியே கருத்தாவாயிற்று. நாணில்லாத மக்கள் இயக்கம், நாணுடைய பாவை இயக்கம் போல்வதல்லது, உயிரியக்கம் அன்று என்பதாம். இவை மூன்று பாட்டானும் நாணில்லாரது இழிவு கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
மனத்தின்கண் நாணமில்லாதார் இயங்குதல், மரப்பாவை கயிற்றினாலே இயங்கி உயிருள்ளதுபோல மயக்குமதனை ஒக்கும். இது நாணமில்லாதார் மக்களல்லரென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
அகத்து நாண் இல்லார் இயக்கம் - தம் மனத்தில் நாணில்லாத மாந்தர் நாணுடையார் போன்றே நடமாடும் நடமாட்டம்; மரப்பாவை நாணால் உயிர் மருட்டிய அற்று - மரத்தினாற் செய்த சிறு படிமை, தன்னை யாட்டும் பொறிக்கயிற்றா லேற்பட்ட தன் ஆட்டத்தினால், தான் உயிருள்ளது போல் தோன்றுமாறு பார்ப்பவர் கண்களை மயக்கினாற் போலும். நாணில்லாதவன் செத்தவனை யொத்தவன் என்பது கருத்து. 'உயிர் மருட்டி யற்று' என்பதால் , பாவையின் அழகும் உயிரோவிய வேலைப்பாடும் அக்காலத் தமிழரின் படிமைக் கலைத் தேர்ச்சியும் உணரப்படும்.இம்மூன்று குறளாலும் நாணில்லாரின் இழிவு கூறப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
உயிர் இருப்பது போலக் கயிறுகொண்டு ஆட்டி வைக்கப்படும் மரப்பொம்மைக்கும், மனத்தில் நாணமெனும் ஓர் உணர்வு இல்லாமல் உலகில் நடமாடுபவருக்கும் வேறுபாடு இல்லை.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
மனத்துள் வெட்கம் இல்லாதவர்களின் நடமாட்டம், மரத்தால் செய்த பொம்மைக்கு உயிர் ஊட்டியிருப்பதாகக் காட்டி மயக்கியது போலாம்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(நாணுடைமை இல்லாதவர்கள், சொந்த உணர்ச்சி யில்லாத பொம்மைகளே. பிறர் சொன்னபடி எதையும் செய்து விடுவார்கள்.) நாணுடைமை மனத்தில் இல்லாதவர்கள் உயிரில்லாத பொம்மை, சூத்திரக் கயிற்றால் ஆட்டப்பட்டு உயிருள்ளது போல் நடிப்பதற்கே சமானம்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
மனத்தில் நாணமில்லாதவர்கள் உயிருடையார் போன்று வாழ்ந்து வருவது, மரத்தால் செய்யப்பட்ட மரப்பாவை இயந்திரக்கயிற்றினால் உயிருடையது போல இயங்கிக்கொண்டு இருத்தல் போன்றதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பழிகளுக்கஞ்சாத, பண்பில்லாத வாழ்க்கை, மரப் பாவையைக் கயிற்றால் கட்டி உயிருள்ளதைப் போல் இயக்குவதற்கு ஒப்பாகும்.
|
|
Translation
|
|
'Tis as with strings a wooden puppet apes life's functions, when
Those void of shame within hold intercourse with men.
|
|
Explanation
|
|
The actions of those who are without modesty at heart are like those of puppet moved by a string.
|
|
Transliteration
|
|
Naanakath Thillaar Iyakkam Marappaavai
Naanaal Uyirmarutti Atru
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|