Thirukural

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார்.

இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் - இறைவன் அடி என்னும் புணையைச் சேர்ந்தார் பிறவி ஆகிய பெரிய கடலை நீந்துவர்; சேராதார் நீந்தார் - அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர். (காரண காரியத் தொடர்ச்சியாய் கரை இன்றி வருதலின், 'பிறவிப் பெருங்கடல்' என்றார். சேர்ந்தார் என்பது சொல்லெச்சம். உலகியல்பை நினையாது இறைவன் அடியையே நினைப்பார்க்குப் பிறவி அறுதலும், அவ்வாறன்றி மாறி நினைப்பார்க்குப் அஃது அறாமையும் ஆகிய இரண்டும் இதனான் நியமிக்கப்பட்டன.)
மணக்குடவர் உரை:
பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேர்ந்தவர்; சேராதவ ரதனு ளழுந்துவார்
தேவநேயப் பாவாணர் உரை:
இறைவன் அடி (சேர்ந்தார்) - இறைவன் திருவடியாகிய புணையைச் சேர்ந்தவர்; பிறவிப் பெருங்கடல் நீந்துவர் - பிறவியாகிய பெரியகடலைக் கடப்பர்; சேராதார் நீந்தார் - அப்புணையைச் சேராதவர் அக்கடலைக் கடவாதவராய் அதனுள் அழுந்துவர். வீடுபேறுவரை கணக்கில் கழிநெடுங்காலம் விடாது தொடர்ந்து வருவதாகக் கருதப்படுதலின், பிறவியைப் பெருங்கடல் என்றார். பிறவி வாழ்வு எல்லையில்லாது தொடர்ந்துவரும் துன்பம் மிகுந்த நிலையற்ற சிற்றின்பமேயாதலால், அதனின்று விடுதலைபெற்று நிலையான தூய பேரின்பந்துய்க்கும் பிறவாவாழ்வைப் பெறும்வழியை இக்குறள் கூறுகின்றது. சேர்ந்தார் என்பது சொல்லெச்சம். பிறவியைப் பெருங்கடலாக உருவகித்து இறைவனடியைப் புணையாக உருவகியாதுவிட்டது ஒருமருங்குருவகம். புணை யெனினும் கலம் எனினும் ஒக்கும்.
கலைஞர் உரை:
வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.
சாலமன் பாப்பையா உரை:
கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
இறைவனை வணங்கி அவனைச் சரணடைகிறவர்களே பிறவித்துன்பம் என்ற கடலிலிருந்து கரையேறுவார்கள். மற்றவர்கள் அந்தப் பிறவித் துன்பக் கடலிலேயே கரையேற மாட்டாமல் தத்தளிக்க வேண்டியதுதான்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
இறைவன் அடிகள் என்னும் தொப்பத்தைச் சேர்ந்தவர்கள், பிறவியாகிய கடலை நீந்திக் கடப்பர். அவ்வாறு சேராதவர்கள் (நினைத்திருக்காதவர்கள்) நீந்த மாட்டார்கள்; அதனுள் அழுந்துவார்கள்.
தமிழ்க்குழவி உரை:
இறையைப் போற்றி இறைநிலைபற்றி வாழ்வார், பிறவியாம் பெருங்கடலை எளிதில் கடப்பர்; ஏனையோர்க்கு இயலாது.
Translation
They swim the sea of births, the 'Monarch's' foot who gain; None others reach the shore of being's mighty main.
Explanation
None can swim the great sea of births but those who are united to the feet of God.
Transliteration
Piravip Perungatal Neendhuvar Neendhaar Iraivan Atiseraa Thaar

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 10